காந்தள்
நிமிர்வு
காரிருள்..., கனத்த மழைமேகம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
ஆளரவமற்ற நீண்டதெரு..
அச்சத்தை ஊட்டும் ஆந்தை ஒலி..
அங்கிங்கென தூறும் மழைத்துளி
அவ்வப்போது தோன்றும் மின்னலொளி
சரசரக்கும் பனையின் ஓலை...
சற்றும் எதிர்பாரா கணையினோசை..
காயமுற்ற நண்பன்- எம்மைக்
கடக்க முயலும் எதிரி...
இயந்திரத்தாங்கியின் பேயிரைச்சல்
பயந்தரும் அத்தனையும் முயன்றும்
பயமறியா உன் வீரமும் நீயும்
பக்கத்தில் நின்றதனால் - என்னுள்
அவை அனைத்தும் முடியாமல்...
தோற்றுப்போனதை நேற்றுப்போல்
நினைத்துப்பார்க்கிறேன்- உன்
நினைவுக்கூட்டத்தில்
நிழற்படத்தைப்பார்த்தபடி....
****
உறுதியின் உறைவிடம்...
கார்த்திகை மேகங்கள்
பார் நனைக்கும்...
காவியமானவர்
வேர் பனிக்கும்...
கல்லறை கீதங்கள்
ஊர் இசைக்கும்...
காதினில் அவர்களின்
பேர் உரைக்கும்...
காட்டினில், களனியில் பூத்திருக்கும்
காந்தள் மலர்களும் காத்திருக்கும்..
காற்றசை மரங்களும்
கடலெழும் அலைகளும்
காவலர் காலடி தேடிநிற்கும்..
பாட்டினில் ஆயிரம் பொருளிருக்கும்
பாவலர் நாவினில் தீ தெறிக்கும்..
சாற்றிய வீரமும் சாதித்த தீரமும்
சரித்திரம் நின்று சான்று சொல்லும் ...
நேற்றைப்போலிருக்கும்..
நினைவெல்லாம் கனக்கும்..
நீண்ட நெடுமூச்சு நெஞ்சைச்சுடும்..
மாண்டவர் என்றா மறந்திடும்? - தமிழ்
மாந்தர்கள் உள்ளவரை மகுடமிடும்..
ஏற்றிய விளக்கும் ஒளிமுகம் பெறும்
காற்றினில் வரும் அப்பாடல் கேட்டதும் உயிர்க்கூடு சுடும்....
கல்லுக்குள்ளும் ஈரம் வரும்
காந்தள் மலர்கூட வீரம் பெறும்...
கண்மணியானவர் தீரம் நினைக்கும்
கண்களினோரம் ஈரம் பனிக்கும்...
திண்ணியமானவர் மூச்சினிலே
கண்ணியம் மீண்டு(ம்)கருத்தரிக்கும்..
காலங்கடந்தும் காத்துக்கிடக்கும்
கல்லறைப் பூக்களில் வேர்முளைக்கும்,
காதல்செய்தேசத்தைப் போயணைக்கும்..
விதைத்த உயிர்விதை வெளிவரும் விழுதெறியும்...விருட்சமாய்
விடுதலை நிமிர்வு பெறும்..
உறுதியின் உறைவிடம்
உங்களை நினைக்கும் - மான
உணர்வுகள் எழுகை பெறும்,
இருகை தொழும்,
உயிர் பெறும் தமிழீழம்...