Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வரலாற்றுக் காயத்தின் பொருக்கு: பார்த்தீனியம் - தமிழ்நதியின் புனைவு குறித்த ஒரு பதிவு

<p>வரலாற்றுக் காயத்தின் பொருக்கு: பார்த்தீனியம் - தமிழ்நதியின் புனைவு குறித்த ஒரு பதிவு</p>
அ.இரவி

 

மத்திய உக்கிரத்தில் ஆரம்பித்த கதை, மழைநீரில் உப்புக் கரிப்பாகக் கரைந்து போகிறது. ஏழு வருடங்கள் நீட்சி கொண்ட இக்கதை, ஆண்டுக்கணக்கில் சுருங்கியதாயினும் வாழ்வுக்கணக்கிலும் வரலாற்றுப் போக்கிலும் நீண்ட காலமாக 512 பக்கங்களில் அது விரிகிறது.

பரணி, வானதி இருவரினதும் 'படர்க்கைப் பார்வை'யில் 'பார்த்தீனியம்' நிலைகொள்கிறது. பரணி, நிலத்தை மக்களை நேசித்தவன். வானதி, பரணியை வாழ்வை நேசித்தவள். இந்த நேசிப்புக்கள் எங்ஙனம் முரண்பட்டது, ஏன் முரண்பட்டது? இம்முரண்பாடுகளின் மோதுகையை புனைவுமொழி கொண்டு நமக்குத் படைத்திருக்கிறார், தமிழ்நதி.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், தமிழ்நதிதான் வானதி. அதனைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமல்ல. அங்கு புனைவு தன் வீரியத்தை இழந்துவிடுகிறதோ என அஞ்சுகிறேன். சுயஅனுபவம் புனைவு ஆகாது என்று அல்ல. அதில் புனைவின் ஆற்றல் வீரியமாகிவிட முடியாது. சுயஅனுபவத்தையும் புனைவுமொழியில் படைக்க வேண்டும். அங்குதான் கலாசிருஷ்டி நிகழ்கிறது.

ஆனால் ஒருபுறத்தில் வானதி தன்னளவில் முழுமை பெறுகிறாள். வாசகர் மனதில் எழும் கேள்விகளுக்கு வானதியிடம் மழுப்பலான பதில்கள் இல்லை. முழுமையான, தெளிவான பதில்கள் இருந்தன. செய்யும் காரியங்கள் அனைத்திலும் சிற்சில பலவீனங்கள் இருந்தபோதிலும் உண்மை, நேர்மை இருந்தன.

தீரமிக்க அவளது காதலின் ஓர்மம் சொல்லி மாளாதது. அவளது காதல் கிடைக்கும் ஒருவன் பெரும்பேறு பெற்றவன் ஆவான். ஒரு பெண்ணின் ஆழ்காதல் அனுபவம் நமக்கு வாசிக்கக் கிடைப்பது பேரானந்தம்.

காதல் முடடாள்தனமானது அல்ல. ஆனால் சிலபல முடடாள்தனங்களைச் செய்யத் தூண்டுகிறது. இப்புனைவை வாசிக்கும் வழி அதனை உணர்கிறோம். இப்புனைவு இரண்டு சந்தர்ப்பங்களில் 'திடுக்கிடும்படியாக' அதை எனக்கு உணர்த்திற்று.

கோட்டையிலிருந்து யாழ்நகர மையம் நோக்கி ஷெல்கள் வந்து வீழ்கின்றன. வெடிக்கின்றன. கட்டிடங்கள் சிதைகின்றன. உயிர்கள் பறிபடுகின்றன. அத்தனை அல்லல்களுக்கிடையில் அவலங்களுக்கிடையில் புகைமண்டலங்களுக்கிடையில் புழுதிபறப்புக்கிடையில் ஒற்றைப்பெண் காதலில் நைந்த மனத்துடன் ஒரு குருட்டு நம்பிக்கையில் காதலனைத் தேடி அலைகிறாள்.

அவள் அருகே இரும்பைக் கிழித்தது போன்ற ஷெல் வெடிக்கும் சத்தம். அவள் காதருகே ஏதோ ஊர்வது போன்ற உணர்வு. தொட்டுப் பார்த்தால், காதிலிருந்து இரத்தம் வடிந்து இறங்குகிறது.

<p>வரலாற்றுக் காயத்தின் பொருக்கு: பார்த்தீனியம் - தமிழ்நதியின் புனைவு குறித்த ஒரு பதிவு</p>

இந்தப் 'பேய்ப் பெடிச்சி'யின் காதலை என்ன பெயர் கொண்டு அழைக்க? காதல் இத்தனை தீவிரமானதா? முட்டாள்த்தனமான காரியங்களைத்தான் அது செய்யுமா? அதுதான் காதலின் ஓர்மமா? எனக்குப் புரியவில்லை. 'காதலித்துப் பார், புரியும்' என்கிறாரோ, தமிழ்நதி?

காதலின் தீவிரம் வெளிப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இது. வன்னியின் கிராமம் ஒன்றிற்கு பரணியைத் தேடிப் போகிறாள் வானதி. இந்திய இராணுவம் ஈழத்தைத் தன் காலடியில் வைத்திருந்த காலம் அது. 'எங்கெங்கு காணினும் / ஹேய்! பராசக்தி/ அவர்கள் அவர்கள்/ நேற்று வந்தவர்கள்' என்று சேரனின் கவிதைவரி சொன்னதுபோல ஈழமெங்கும் இந்திய இராணுவம் நீக்கமற நிறைந்திருந்தது.

சாகசம் நிறைந்த பயணம் செய்து விடுதலைப் புலிப் போராளியாகிய பரணியைக் காண்கிறாள், வானதி. ஏலவே வரிச்சீருடையுடனும் போராளிகளுடனும் புகைப்படம் எடுத்திருந்தவள், வானதி. அப்புகைப்படம் இந்திய இராணுவத்திடம் அகப்பட்டும் இருந்தது.

அவ்வளவு தெரிந்தும் பரணியைக் கண்டுவிட்ட பிறகும் மிகு காய்ச்சலுடன் இடையில் பஸ்ஸால் இறங்கி, பரணியைக் காணச் செல்கிறாள். ஓமந்தை, இந்திய இராணுவமுகாமில் அவளை இராணுவத்தான் ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் தமிழனாக இருக்க வேண்டும். வானதியின் பயணத்திற்கு ஊறு செய்ய அவன் விரும்பவில்லை.

'பார்த்தீனியம்' நூலைத் திருப்பி, தமிழ்நதியின் புகைப்படத்தைப் பார்த்து, 'பேய்ப்பெட்டை' என்று மீண்டும் ஒருமுறை திட்டினேன். வானதியை அவ்வாறு உந்தித் தள்ளியது எது? காதலின் ஓர்மமா? நைந்துபோன அவளது மனமா? எதுவோ, வானதியின் காதல் அத்தனை வலியது என நினைக்கிறேன்.

சுயஅனுபவமே தமிழ்நதியால் வானதியை அவ்வாறு 'படைப்பதற்கு' காரணமாயிற்று. இது பலமா, பலவீனமா? சுயஅனுபவம் இல்லாது, தள்ளிநின்று வானதியைப் 'படைக்க' தமிழ்நதி முயன்றிருப்பாரானால் இத்தனை வீறுடன் வானதி வெளிவந்திருப்பாளா?

பரணி வந்தானே! பரணி, யதார்த்த வாழ்வு கொண்ட ஒருவனாக இருந்தாலும் புனைவு மொழியில் சிறப்பாகவே அவன் படைக்கப்பட்டிருந்தான். மண் மீது, மக்கள் மீது, இயக்கம் மீது, தலைவர் மீது அவனுக்கு இருந்த பற்று ஓர்மமாக வெளிப்பட்டிருந்தது. பரணி தனிமனிதன் அல்லன், அவன் ஓர் இயக்கம். இலட்சியம் மிகுந்த போராளிகளின் கூட்டு மனச்சாட்சி அவன். பரணி என்பவன் 'விமர்சனம் - சுயவிமர்சனம்' என்பனவற்றின் குறியீடு என்றும் கூறலாம்.

கூட்டு மனச்சாட்சி என்றேனா? அது மிகச் சரியான வார்த்தை. தமிழ்நதி தன் புனைவினூடாக கூட்டுமனச்சாட்சியின் குரலை அடிக்கடி ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தார். காலத்தின் தேவை அது. புனிதம் மிகுந்த போராட்டம் இது. வியர்வையால், குருதியால், தியாகத்தால், உணர்வால், ஓர்மத்தால், வீரத்தால் மேலாக உயிர்களால் செதுக்கப்பட்ட போராட்டம் இது. ஆனால் போராட்டப் பாதை புனிதமாக அமைந்தது அல்ல. கழிவுகள் அதனுள் கிடந்தன. வஞ்சகம், அதிகாரவெறி, அகம்பாவம் என்று பல கழிவுகள் அதனுள் இருந்தன. ஓம், இருந்தன என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அதனை நீக்கும் வழிவகை தெரிந்திருக்க வேண்டும். நீக்க வேண்டும். போராட்டத்தின்பால் நேயம் கொண்ட நாம்தாம் அதனைச் செய்யவேண்டும். இந்தப் புனைவில் அதனைக் காண்கிறேன். தமிழ்நதி சரியாகவே அதனைச் செய்து விடுகிறார்.

வவுனியா - இரணை இலுப்பைக்குளம், பூவரசங்குளம் இவற்றை அண்டிய பகுதி. ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுப்பாளர் றீகனுக்கு மாத்தையாவால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தளபதிகளான கிட்டு, சந்தோசம், புலேந்தி போன்றவர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் அதிகாரத்தின் முன் அவர்கள் பணிந்து போகிறார்கள்.

'என்னிலை ஒரு குற்றமும் இல்லை. தீர விசாரிச்சுத் தண்டனை தாங்கோ' (பக் 247) என்கிறான் றீகன். அதனை வாசிக்கும் கணத்தில் நான் அதிர்ச்சிக்கு ஆளாகிறேன். சக இயக்கங்களில் ஓர் இயக்கப் பொறுப்பாளருக்கு மற்றைய இயக்கப் பொறுப்பாளர் தண்டனை வழங்குதல் என்ன விதத்தில் நியாயம்? என்ன தவறு எனினும் தலைமைகளுடன் பேசப்பட வேண்டும். எதனையும் தீர்மானிப்பது அந்தந்த இயக்கங்களின் தலைமைகளே. என்ன சூழல் இது? விடுதலைப் புலிகளிடம் இந்த ஆதிக்க மனோபாவத்தைக் கொடுத்தவர்கள் யார்?

'அவனை என்னாலை ஒருகாலமும் மறக்க முடியாதெடா.. எங்களைப்போல அவனும் போராடத்தானே வந்தவன்..'(பக் 247) என்று விடுதலைப்புலிப் போராளி பரணி குமுறுகிறான். றீகனைக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுடுவதற்காகக் கொண்டு சென்றபோது, பரணியின் மடிமீது றீகன் தலைவைத்துப் படுத்திருக்கிறான். றீகனின் தலையை யாருமறியாது தடவிக் கொடுத்த பரணி, ஓரிரு வார்த்தைகள் ஆறுதல் சொல்லவும் விரும்புகிறான். தான் தவறாக விளங்கப்பட்டு விடுவேனோ என்பதும் பரணியின் தயக்கத்துக்குக் காரணம். என்ன விதமான சூழலில் நம் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது, பாருங்கள்.

இந்த ஒரு மனோபாவத்தை நாம் விடுதலைப் புலிகளிடம் மாத்திரம் சுமத்திவிட்டுத் தப்ப முடியாது. ஏனைய போராட்ட அமைப்புக்களிலும் இத்தகைய மனோபாவம் இருந்ததை நாம் அறிவோம். ஆதாரங்களும் உள்ளன. இந்த 'எழுத்துக்கு' அவை இப்போது தேவையில்லை.

இந்த மனச்சாட்சியின் குரல் பரணியிடம் அடிக்கடி வெளிப்பட்டது. 'நீ போயிடு மைச்சான்..' என்று போராளித் தோழர் சொல்கிறபோது, 'இல்லை, நான் போகமாட்டன்.. இப்பிடிக் குற்றம் செய்தவனைப்போல இடைநடுவில் போறத்துக்கா இயக்கத்துக்கு வந்தன்..' என்கிறான் பரணி. (பக் 246)

'ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தை வழிநடத்திறது சாதாரண விஷயமில்லை, அதுக்காக அவரிலை விமர்சனங்கள் இல்லையெண்டில்லை..' (பக் 303) என்ற குரலும் எழும் இடம் இதுதான். விமர்சனத்துடன், அதேசமயம் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக எழும் குரல் இது. தமிழ்நதியிடம் அந்தக் குரல் கண்டிப்பாகவே ஒலித்து விடுகிறது. அவைதாம் இப்போதைய தேவையும் கூட.

வாழ்வும் போரும் எப்போதும் ஒற்றை நேர்கோட்டில் பயணிப்பது அல்ல. ஒற்றைவழிப் பாதையும் கூட அல்ல. கொண்டும் கொடுத்தும் சென்றும் நின்றும் திரும்பியும் ஈரடி முன்னேயும் ஓரடி பின்னேயும் ஆகி அமைதல்தான் நியதி. உலகில் எந்தப் போர்வாழ்வும் அவ்வாறே ஆகிவிடுகிறது. அவ்வாறான வாழ்வில் இலக்கியமே மருந்தாகவும் இட்டுக் கட்டப்படுகிறது. 'பார்த்தீனியம்' அவ்வாறான 'மருத்துவ' இலக்கியம்.

ஒருகட்டத்தில் புழுங்குகிறான் பரணி. வாழ்வின் உச்சக்கட்ட விரக்தி நிலவிய காலம். மாத்தையா எனும் 'அதிகாரி' பரணிக்குச் சிலபல இக்கட்டுகள் கொடுக்கிறார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தலைவர் பிரபாகரனைப் பரணி சந்திக்கிறான். நடந்தவைகளைக் கேடட தலைவர், 'நீங்கள் செய்தது சரி. ஆர் பிழை விட்டாலும் பிழைதானே?' என்கிறார். (பக் 303) பரணியின் நெஞ்சு பெருமிதத்தில் விம்முகிறது. காற்றில் மிதந்து செல்பவன்போல உணர்கிறான். கம்பீரம் அவன் நடையில் தெரிகிறது.

போராட்ட வாழ்வின் உன்னதத்தைச் செழுமைப்படுத்த இத்தகையவற்றைப் பதிவு செய்ய வேண்டிய தேவை உருவாகிறது. இந்தப் பதிவு என்பது அடுத்த சந்ததிக்கான ஆவணம். செழுமையான போராட்டம் ஒன்றில் நாம் ஈடுபட்டோம் என்பதற்கான ஆதாரம். இவற்றை மேலும் விமர்சிப்பதற்காக வரும் இந்த வாக்கியங்களைக் கவனியுங்கள்:

'இயக்கத்துக்குக் கிடைக்கிற அங்கீகாரமும் புகழும் உமக்கும் சுவறுதெண்டா, இயக்கம் செய்யிற தவறுகளிலையும் உமக்கும் பங்கிருக்கு. போராட்ட வரலாற்றிலை தனிக் குற்றமெண்டோ நீதியெண்டோ ஒண்டில்லை. எல்லாம் பொதுக்குற்றமும் நீதியும்தான்' என்று நீதியான மனிதனாகிய ஜீவானந்தனின் குரல் ஒலிக்கிறது.

இந்த வாக்கியங்களை வாசிக்கிறபோது 'அற்புதம்' என்று முணுமுணுக்கிறேன். இது ஜீவானந்தனின் வார்த்தைகள் அல்ல. கூட்டு மனச்சாட்சியின் குரல். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஜீவானந்தம் உதிர்க்கும் வார்த்தைகளையும் அதன் வழிதான் பார்க்கிறேன். 'ஜனநாயக ரீதியிலான விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிற பரந்த மனப்பாங்கு எல்லாரிட்டையும் இருக்குமென்று எதிர்பார்க்கேலாது. சிலருடைய அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படேக்கை அவையின்ரை இலட்சிய நோக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு வெறுப்பும் கோபமும் மட்டும்தான் அந்த இடத்தில செயற்படும். அதிகாரம் உருவாக்கக் கூடிய அகங்காரம் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும்.' (பக் 306)

இந்த வாக்கியங்கள் எல்லாம் சும்மா உதிர்த்துவிட்டுச் சென்ற வாக்கியங்கள் அல்ல. இவை தீவிர மனநிலையில் இருந்து எழுகின்ற வாக்கியங்கள். இது தமிழ்நதியின் மனதினுள் நாளும் பொழுதும் மோதுகையுற்ற வாக்கியங்கள். அல்லாமல் இத்தகைய வாக்கியங்கள் வெளிப்படமுடியாது. அதுவும் பெண்மொழியில் அல்ல. ஆண்மொழியில் திடகாத்திரமாக வந்து விழுகிறது. இது பொதுவான சமூகம் பற்றிய கறாரான விமர்சனக்குரல்.

இந்த போராட்டம் பற்றிய விமர்சனம் வேறோர் இடத்திலும் அருமையாக வந்து விழுகிறது. விடுதலைப் புலிகளால் ரெலோப் போராளிகள் வேட்டையாடப்பட்ட நேரம். 'விடுதலை' என்று சொல்லிப் புறப்பட்டவர்களின் கோரமுகத்தைக் கண்டு கலங்கினேன். துக்கம் சுமந்தவர்கள் அப்போது அதிகம் இருந்தனர். சிலர் திட்டித் தீர்த்தனர். சிலர் தம்முள் மெலிதாக விம்மினார். ஆயினும் கடூரமான குரல்கள் மாத்திரமே வெளியில் கேட்டன. 'இனி ஊருக்குள்ளை கொள்ளைகள் நடக்காது. நாங்கள் நிம்மதியா நித்திரை கொள்ளலாம்.'(பக் 175)

ஒரு கொடுமை நிறைந்த காலத்தை எவ்வளவு சுலபமாகவும் மௌனமாகவும் கடந்து விட்டிருக்கிறோம்? ஓம்தானா, அது உண்மையா? இங்குதான் தமிழ்நதியின் குரல் தமிழ்த்தேசத்தின் குரலாக ஒலிக்கிறது: 'கடைசியிலை நீ தியாகியுமில்லை...துரோகியுமில்லை... நீ ஆர் அண்ணா?' செத்துப் போய்க் கிடந்த ரெலோப் போராளியின் தம்பி இதனைக் கேட்கிறான். (பக் 175) நான் துடித்துப் பதைத்து விட்டேன். இந்தக் கேள்வியைத் தமிழ்நதியின் மனசு எப்போதும் கேட்டபடி இருந்திருக்கிறது. அது வெளிப்பட்ட இடம் இது. எல்லோர் மனதிலிருந்து அது எதிரொலித்தும் விட்டது.

வேறு சில படைப்பாளிகள் இந்த இடத்தில் வந்துபோவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டம் தோல்வியடைந்தது என்ற உணர்வு வந்தவுடன் தம் அத்தனை தியாகங்களையும் உதறி எறிந்து, போராட்டத்திலிருந்து மெல்லக் கழன்று விடுகிறார்கள். அதுமாத்திரமல்லாது, தமக்கும் அப்போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் 'நான் அப்போதே சொன்னேன்; அவர்கள் கேட்கவில்லை' என்றும் அவர்கள் உரைப்பதைக் கேட்கிற போதினிலே இத்தகைய படைப்புகளே நமக்கு அருமருந்தாகிறது.

1983 - 1990 இடைப்பட்ட காலத்தைப் புனைவு மொழியில் படைத்துள்ளார், தமிழ்நதி. 'இந்திய அமைதி காக்கும் படை' என்ற பெயரில் வந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித்தனங்கள், அட்டகாசங்கள் இதில் வரையப்பட்டுள்ளன. என் நினைவுக்கெட்டியவரையில் இந்தக் காலப்பரப்பை விஸ்தாரமாக வேறு எந்தப் படைப்பும் சொன்னதில்லை. (நான் எழுதிய 'அதிகாரி' என்ற குறுநாவல் இக்காலத்தைக் காட்டியது).

ஈழத்தமிழர் வாழ்வில் மிகவும் கொடியகாலம் என்று இதனை வரையறுக்கலாம். ஆக்கிரமிப்புப் படையும் அதனுடன் இணைந்த ஒட்டுக்குழுக்களும் செய்த அட்டூழியம் ஈழத்தமிழர் பலரை விடுதலைப் புலிகள் பக்கம் ஈர்க்க வைத்தது என்பேன். முன்னர் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய சகோதர படுகொலைகளை நியாயப்படுத்தவும் வழி அமைத்தது.

'பார்த்தீனியம்' எனும் இப்புனைவு அதன் காரணிகளை உயர உயர அடுக்கிச் சென்றது. 'பார்த்தீனியம்' என்ற தலைப்பே அதற்கான மடைமாற்றம் என்பேன். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவ வருகை, அதனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை ஈகம் செய்த பார்த்தீபன் என்கின்ற திலீபன், இந்தியப்படை ஈழத்தில் எப்படியோ கொண்டுவந்து சேர்த்த பார்த்தீனியம் எனும் நச்சுவிதை... யாவற்றையும் நோக்குங்கால் இந்திய ஆக்கிரமிப்புப் படைக்காலத்தையே இப்புதினம் மையம் கொள்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

வானதியின் காதலினூடாகவும் காதலனைத் தேடுவதனூடாகவும் இந்தியப்படையின் காலம் விபரிக்கப்படுகிறது. ஒரு முழுமையான வண்ணம் இந்தப் பாகத்தில் படிந்திருக்கத் தவறவில்லை. ஆயினும் ஒன்றை யோசித்தேன், இந்தப் பாகம் தனித்து வந்திருக்க வேண்டும் என. இன்னும் நுணுக்கமாகத் தீட்டியிருக்கத் தமிழ்நதியால் முடிந்திருக்கும் என்பதும் என் ஆதங்கம். அவ்வாறு நிகழ்கிறபோதுதான் அதன் கனதி நம்மேல் ஏறி அமர்ந்திருக்கும்.

பரணி என்கின்ற நாயகன் நம்முள் ஆட்சி செலுத்தும் வேளை ஆக்கிரமிப்புப் படையின் காலத்தை, அதன் கோரத்தைத் தாண்டிவிட்டுப் போகிறோமோ என்ற கவலை எனக்கு. 'பார்த்தீனியம்' புனைவை மீளநிறுத்திப் பார்க்கிறேன், இக்கட்டுரையை எழுதுவதற்காக மீண்டும் 'ஓடவிட்டு' வாசித்தபோது, இந்தக் கொடுங்காலத்தை எப்படித் தாண்டிப்போக நினைத்தேன் என என்னுள் மறுகினேன்.

காலம் அவ்வளவாகப் போய்விடவில்லை, இப்போதும்கூடத் தமிழ்நதி, இந்திய ஆக்கிரமிப்புப் படையின் காலத்தை தனித்த ஒரு புதினமாகத் தந்துவிட முடியும். அதற்கு ஒரு தேவையும் உண்டு. தமிழ்நதியிடம் புனைவுதிறனும் போதிய அனுபவங்களும் உள்ளபோதில் இதன் தேவையை உணர்ந்து கொண்டால் போதுமானது. இன்னுமொன்று, பக்கங்கள் குறைந்த புதினம் அதிகம்பேரைச் சென்றடையும் சந்தர்ப்பத்தையும் நாம் மறுக்கக் கூடாது.

குணா கவியழகன் (நஞ்சுண்ட காடு), சயந்தன் (ஆதிரை), தமிழ்நதி (பார்த்தீனியம்) போன்றவற்றில் தமிழுக்கான படைப்பாற்றல் உண்டு. தமிழ்த்தேசியத்துக்கான அரசியல் உண்டு. இவர்களை ஏற்றி வைத்துப் போற்றுதல் நமக்கான வரலாற்றுக் கடமை. அதை இதில் பதித்தலும் அவசியம்.

தமிழ்நதி பெண்பால் எழுத்தாளர் என்று வரையறை செய்து சொல்லவில்லை, தமிழின் சிறந்த புத்தகங்களுக்கான புத்தக அலுமாரியின் மேலடுக்கில் தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நிச்சயம் இடம்பெறும்.

இதுகாறும் வரலாற்றுக் காயத்தின் பொருக்கை நான் சொன்னேன். அது உடைபட்டதில் நோப்பட்டுத் துடித்துப் போனேன். துடித்துத் துவள வைத்திருக்கிறார், தமிழ்நதி. அவ்வளவே.

9/24/2016 12:02:13 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்